http://www.nilacharal.com/ocms/log/07251103.asp
http://www.nilacharal.com/ocms/log/08011102.asp
வாழ்க்கையின் எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் உள்ள பொதுவான ஆசை, கனவு
சொந்த வீடு வாங்குவது தான். சொந்த வீட்டில் இருப்பதில் உள்ள மகிழ்ச்சியை
தானும் அனுபவித்துக் கொண்டு தம்முடைய சந்ததியினரும் அனுபவிக்க வேண்டும்
என்பது தான் நோக்கம். குடியிருப்பதற்கு சொந்த வீடு வாங்கிய பிறகும் மற்ற
இடங்களில் சொத்து வாங்குவது கண்டிப்பாக நாம் அனுபவிப்பதற்காக அல்ல.
நம்முடைய குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்காகவும்
அல்லது தமக்குப் பிறகு அந்த சொத்து குழந்தைகளுக்குப் போய் சேர்ந்து
அவர்கள் வாழ்க்கைக்கு அது உதவ வேண்டும் என்பது தான். காரணம் எதுவாக
இருந்தாலும் நாம் குடியிருக்கும் வீடு உட்பட நமக்கு சொந்தமான எல்லா
சொத்துக்களும் நம்முடைய காலத்திற்குப் பிறகு நம்முடைய வாரிசுதாரர்களுக்கு
போய் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சேர வேண்டும் என்பது தான் எல்லோருடைய
நோக்கமாக இருக்கும்.
நாம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்கள் நம் காலத்திற்குப் பிறகு நம்முடைய
வாரிசுதாரர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் சேருவதற்கு நாம் செய்ய
வேண்டிய வழிமுறைகள் சிலவற்றில் முக்கிய பங்கு வகிப்பது "உயில்" என்பது
தான். நம்முடைய சொத்து, நம் காலத்திற்கு பிறகு நம் வாரிசுகளில் யார்
யாருக்கு எந்தெந்த சொத்து போக வேண்டுமென்று நாம் தெளிவாக முறைப்படி எழுதி
வைப்பது தான் உயில்.
உயில் என்றதுமே பலருக்கும் பல வழிகளில் அச்சம் வருகிறது.
1. பொதுவாக கிராமப்புரங்களில் உள்ளோர் உயில் எழுதி விட்டாலே இறந்து
விடுவோம் என்ற நம்பிக்கை.
2. அதனால் மனதளவில் ஏற்படும் பாதிப்பு.
3. நாம் இறந்த பிறகு தான் சொத்து உரியவர்களுக்குப் போய் சேரும் என்பதால்
அவர்களால் தம்முடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயம்.
மேற்கூறிரிய காரணங்களாத்தினால் பலர் உயில் எழுத யோசிப்பது உண்டு. மேலும்
சிலர் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறோம். அதனால் இப்பொழுது
உயில் எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். உயில்
எழுதாவிட்டால் நம் காலத்திற்குப்பிறகு நம்முடைய சொத்து நாம்
விருப்பப்பட்டவர்களுக்கு போய் சேராமல் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதை பல உதாரணங்கள் மூலம் தான் விளக்க முடியும்.
திருநெல்வேலி அருகில் ஒருவருக்கு 40 ஏக்கர் நிலம் இருக்கிறது. அவருக்கு
இரண்டு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும். எல்லோருக்கும் திருமணம்
ஆகி விட்டது. அவருக்கு பதினோரு பேரக்குழந்தைகள். அதில் மூன்று பேர்
பதினெட்டு வயது நிரம்பியவர்கள்.
அவருக்கு வயது அறுபத்து இரண்டு. அவரை உயில் எழுதச்சொல்லி அவர் உறவினர்
ஒருவர் சொல்லியும் மறுத்து விட்டார். "எனக்குப்பிறகு இந்த 40 ஏக்கர்
சொத்தும் என்னுடைய இரண்டு ஆண் பிள்ளைகளுக்குத்தான்." நான் என்னுடைய பெண்
பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய எல்லாவற்றையும் அவர்களின் திருமணத்தின் போதே
செய்து விட்டேன். அவர்களிடமும் இந்த 40 ஏக்கரும் எனக்குப் பிறகு
உங்களுடைய சகோதரர்களுக்குத்தான் என சொல்லிவிட்டேன். என்னுடைய
பெண்பிள்ளைகள் என் மேல் மிகுந்த பாசம் உள்ளவர்கள், அதனால் என்
காலத்திற்கு பிறகும் என்னுடைய பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள் என
சொன்னார். பெண் பிள்ளைகளிடம் தாம் சொல்லிவிட்ட காரணத்தினாலும் அவர்களும்
சம்மதம் தெரிவித்த காரணத்தினால் உயில் தேவையில்லை என நினைத்தார். அவருடைய
இரண்டு ஆண் பிள்ளைகளுமே அப்பாவைப்போல சகோதரிகள் மீது அதிக பாசம்
கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவர் இறந்த பின்பு நிலைமை தலைகீழாக மாறுகிறது. அப்பா இறந்த ஆறு மாத
காலத்திற்குப் பிறகு தன் சகோதரிகளை ஆண் பிள்ளைகள் இருவரும் தங்கள்
பெயரில் சொத்துகளை மாற்றுவதற்கு உள்ள ஆவணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில்
பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி அழைக்கிறார்கள். நான்கு சகோதரிகளும்
வெவ்வேறு இடங்களில் வசித்து வருவதால் இன்னும் ஒரு மாத காலத்திற்குள்
எல்லோருக்கும் வசதியான ஒரு நாளில் வருகிறோம் என்ற பதில்
சகோதரிகளிடமிருந்து வருகிறது. ஒரு மாத காலம் முடிந்த பின்பும் அவர்கள்
வரவில்லை. திரும்ப அழைக்கும் போது இன்னும் ஒரு மாத கால அவகாசம்
கேட்கிறார்கள். அந்த காலக்கெடுவும் முடிந்த பின்பும் அவர்கள் வரவில்லை.
மூத்த சகோதரி, ஒரு விடுமுறை நாளில் நாம் எல்லோரும் உட்கார்ந்து பேசி
முடிவெடுப்போம் என்று சொல்கிறார். இதில் பேச என்ன இருக்கிறது என்று
நினைக்கும் சகோதரர்கள், சகோதரிகளின் விருப்பப்படி எல்லோரும் உட்கார்ந்து
பேசுகிறார்கள். பேசும் போது அவர்களுடைய எண்ணங்கள் திசை மாறுகிறது. அப்பா
எங்களுக்கு செய்திருக்கிறார், ஆனால் இந்த சொத்தில் பத்தில் ஒரு பங்கு
மதிப்பு கூட இருக்காது. அதனால், எங்கள் நான்கு பேருக்கும் தலா ஐந்து
ஏக்கர் வீதம் கொடுத்துவிட்டு மீதி இருபது ஏக்கரை நீங்கள் இருவரும்
பிரித்துக்கொள்ளுங்கள் என்று பதில் வருகிறது. அப்பாவிடம் நீங்கள் இப்படி
சொல்லவில்லையே என்று அவர்கள் கேட்டதற்கு, இப்போது நிலைமை அப்படி இல்லை,
நீங்களும் நன்றாகத்தானே இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதில்
இரண்டு சகோதரிகள் எங்களுடைய கணவன்மார்கள் தான் எங்களை தொந்தரவு செய்து
கேட்கச்சொல்கிறார்கள் என்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச்
சொல்கிறார்கள். எவ்வளவோ எடுத்துக் கூறியும், போராடிப்பார்த்தும்
சகோதரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் சகோதரிகள் நினைத்தது
போலவே ஒவ்வொருக்கும் ஐந்து ஏக்கர் இடத்தை கொடுத்துவிட்டு மீதி உள்ள
இருபது ஏக்கரில் ஒவ்வொருவரும் பத்து ஏக்கர் எடுத்துக் கொண்டார்கள்.
இது நியாயம் தானே என்று பலர் சொல்வார்கள். பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில்
பங்கு இருக்கிறது என்று வாதாடுபவர்களும் உண்டு. நாம் விவாதித்துக்
கொண்டிருப்பது நியாயத்தைப் பற்றியது அல்ல. நாம் சம்பாதித்த சொத்து நாம்
விருப்பப்பட்டவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நம்
காலத்திற்குப் பிறகு போய் சேர்ந்ததா என்பது தான்.
--------------------
சென்னையில் ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் மூன்று சொத்துக்கள்
இருக்கின்றன. அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும்
இருக்கிறார்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர் திடீரென்று
மாரடைப்பினால் இறந்து விட்டார். அவர் உயில் எழுதவில்லை. அவருடைய மனைவி
ஏற்கனவே இறந்து விட்டதால், அவருடைய வாரிசுதாரர்கள் பிள்ளைகள் மூவரும்
தான். மூன்று இடங்களில் உள்ள சொத்துக்களுக்கும் இவர்கள் மூவரும்
உரிமையாளர் ஆவார்கள். மூவரும் சொத்தை எவ்வாறு பிரிப்பது என்பதைப்பற்றி
ஒரு நாள் அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது இளைய ஆண் பிள்ளையும் பெண்ணும்
ஆளுக்கு ஒரு சொத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். ஆனால்
அதற்கு மூத்தவர் ஒவ்வொருறு சொத்து மதிப்பும் வித்தியாசப்படுகிறது என்று
கூறி ஒத்துக் கொள்ளவில்லை. அம்மூன்று சொத்துக்களில், விலை மதிப்பு
கூடுதலாக உள்ள சொத்தை மூத்தவரை எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள். மற்ற இரு
சொத்துக்களில் தாங்களிருவரும் ஒவ்வொன்றை எடுத்துக் கொள்கிறோம் என்று
சொல்கிறார்கள், அதற்கும் அந்த மூத்தவர் மறுக்கிறார். அம்மூன்று
சொத்துக்களையும் விற்று சமமாக மூவரும் பணத்தைப் பிரித்துக் கொள்ளலாம்
என்று கூறுகிறார். ஆனால் இளையவரோ அந்த சொத்துக்களின் மதிப்பு
பிற்காலத்தில் நன்கு கூடும், ஆகையால் அதை தற்போது விற்கக்கூடாது என்று
கூறுகிறார். பெண் பிள்ளையோ, அப்பா சம்பாதித்த சொத்தை நான் இருக்கும்வரை
விற்கப்போவதில்லை, அதனால் மூன்றில் ஏதாவது ஒரு சொத்தை எனக்கு
கொடுத்துவிடுங்கள் என கேட்கிறார்.
இவர்களின் தந்தை உயிருடன் இருந்த போதே சொத்துக்களை அவர் விருப்பப்படி
யார் யாருக்கு எந்த சொத்து என்று உயில் எழுதி வைத்திருந்தால், இப்போது
மூன்று பிள்ளைகளும் எந்த பிரச்சனையும் இன்றி அவரவர்களுடைய சொத்தை
எடுத்துக் கொண்டிருக்கலாம். மேலும் இந்த சொத்து விஷயத்தில் தற்போது
இவர்களுக்குள் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. அப்பா உயிருடன் இருந்தபோது
ஒற்றுமையுடன் இருந்த மூவரும் தற்போது ஒருவருக்கு ஒருவர்
பேசிக்கொள்வதில்லை. இதைத் தெரிந்து கொண்ட அவர்களுடைய உறவினர்கள், தாங்கள்
பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனையைத் தீர்த்துவைப்பதாகக் கூறி இவர்கள்
குடும்பப் பிரச்சனையில் தலையிடுகிறார்கள். தந்தை கஷ்டப்பட்டு இந்த
சொத்துக்களைச் சேர்த்தது, தமது பிள்ளைகளின் குடும்பத்தின்
எதிர்காலத்திற்குப் பயன்படும் என்று தான். ஆனால், நிலைமை இப்போது
தலைகீழாக மாறி இருக்கிறது. சொத்து இல்லாமல் இருந்திருந்தால் கூட
ஒற்றுமையாக இருந்திருப்பார்கள் என்று பலரும் பேசுமளவிற்கு நிலைமை
உருவாகிவிட்டது.
-------------------
உயிலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் நாம் பதிவு செய்வது நல்லது. சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லக்
கூடிய நிலையில் உள்ளவர்கள் உயிலை பதிவு செய்துவிட வேண்டும்.
முடியாதவர்கள் வீட்டில் இருந்தவாரே உயில் எழுதலாம். உயில் எழுதுவதற்கு
முன்பு முக்கியமான சிலவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
1. நம்மிடம் உள்ள எல்லா சொத்துக்களையும் பட்டியலிட வேண்டும்.
2. சொத்துக்களின் முழு விவரத்தையும் அதாவது சர்வே எண், அளவு, பட்டா எண்,
கிராமம், கிரயப்பத்திர எண் போன்றவற்றை தெளிவாக எழுதிக் கொள்ள வேண்டும்.
3. எந்தெந்த சொத்துக்களை யார் யாருக்கு கொடுக்கப் போகிறோம் என்பதையும்
தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டும்.
4. யார் யாருக்கு கொடுக்கிறோமோ அவர்களின் பெயர், உறவு முறை
முதலியவற்றையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
5. அதே போல் ஏதாவது ஒரு சொத்தை பிரிக்க நேரிடும் போது அது எவ்வாறு
பிரிக்க வேண்டும் அதில் எந்த பக்கம் யாருக்கு சேரவேண்டும் என்பதும்
தெளிவாக குறிப்பிட வேண்டும். பொதுவாக குறிப்பிடக் கூடாது. அதாவது சொத்தை
இரண்டாக பிரித்து சரிபாகமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று
குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
6. அதே போல வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டை பிரிக்க வேண்டிய சூழல்
இருந்தால் எந்த பகுதி யார் யாருக்கு என்றதையும் தெளிவாக குறிப்பிட
வேண்டும். எடுத்துக்காட்டாக கீழ்தளம் ஒருவருக்கு, முதல் தளம் ஒருவருக்கு
என்று தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
உயில் தெளிவாக எழுதாவிட்டாலும் அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
திருச்சியில் ஒருவருக்கு 6 ஏக்கர் நிலமும் இரண்டு வீடுகளும் இருந்தனது.
அவருக்கு இரண்டு ஆண் வாரிசுகள். அவர் தன்னுடைய உயிலில் தமது
காலத்திற்குப் பிறகு இரண்டு வீடுகளைத் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும்
என்று எழுதிவிட்டு ஆறு ஏக்கர் நிலத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்ள
வேண்டும் என எழுதிவிட்டார். அவர் காலத்திற்கு பிறகு அந்த ஆறு ஏக்கர்
நிலத்தை எப்படி இரண்டாக பிரிப்பது, அதாவது முன்புறம், பின்புறம் என்றா
அல்லது வலது, இடது என்று பிரிப்பதா என்ற குளறுபடி. ஆறு மாத காலத்திற்கு
பிறகு உறவினர்கள் எல்லாம் சேர்ந்து பெரும் பிரச்சனைகளுக்கிடையே அதை
தீர்த்து வைத்தார்கள்.
சென்னையில் ஒருவருக்கு மூன்று கிரவுண்ட் நிலம் இருந்தது. அவர் உயில்
எழுதும் போது அவருடைய ஒரு மகனுக்கும் மகளுக்கும் அது சொந்தம் என எழுதி
வைத்து விட்டார். இதிலும் எப்படி பிரிப்பது என்ற பிரச்சனை தான்
ஏற்பட்டது. தீர்வு ஏற்படாத நிலையில் அந்த இடத்தை விற்று அந்தப் பணத்தை
இருவரும் சமமாக பிரித்துக் கொண்டார்கள். உயில் தெளிவாக இல்லாத
காரணத்தினால் ஒரு நல்ல இடத்தை விற்க வேண்டிய நிலை.
இன்னும் சிலர் செய்யும் தவறு உயில் எழுதும் போது சில சின்ன சொத்துக்களை
சேர்க்க மறந்துவிடுகிறார்கள். தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட
கிராமத்தில் பல இடங்களில் 16 செண்ட், 7 செண்ட் என்பது போன்று இருபத்து
ஐந்து சர்வே எண்களில் மொத்தம் பதினோரு ஏக்கர் அளவு விவசாய நிலம்
இருந்தது. அவர் உயில் எழுதும் போது மூன்று சர்வே எண்களை விட்டு விட்டார்.
அவர் இறந்த பிறகு அவருடைய வாரிசுகள் அந்த விடுபட்ட இடத்தை கண்டுபிடித்து
விடுகிறார்கள். இப்போது அதை விற்க முற்படும் போது எல்லா வாரிசுகளும்
அதில் கையெழுத்து இட வேண்டும். மொத்தம் எட்டு வாரிசுதாரர்கள்.
ஒவ்வொருத்தரும் வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அதில் மூவர்
வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். இப்போது வெளிநாடுகளில் வசிக்கும்
எல்லோரும் ஊரில் உள்ள ஒருவருக்கு பவர் ஆ•ப் அட்டார்னி கொடுத்து விற்க
வேண்டிய சூழ்நிலை. இது தேவையில்லாத ஒன்று தான்.
சில சமயங்களில் உயில் எழுதும் வயதானவர்கள் தங்களுடைய பேரப் பிள்ளைகளுக்கு
சொத்து எழுதி வைக்கும் போது வீட்டில் அழைக்கும் செல்லப் பெயரை
குறிப்பிடுகிறார்கள். பெயர் சரியாக குறிப்பிடவேண்டும் என்ற
முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதில்லை.
திருநெல்வேலியில் எண்ன்பது வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கு ஐந்து பிள்ளைகள்
மற்றும் பதினான்கு பேரப்பிள்ளைகள். கணவரும் இறந்து விட்டார். நிறைய
இடத்தில் சொத்துக்கள் வைத்திருக்கும் அவர் எல்லோருக்கும் சொத்துக்களைப்
பிரித்து உயில் எழுதுகிறார். யாருக்குமே தெரியவேண்டாம் என நினைக்கும்
அவர் தமக்கு தெரிந்த டாக்குமென்ட் ரைட்டர் ஒருவரை வைத்து உயில்
எழுதுகிறார். அதில் அவருடைய பேரன்கள் இருவரின் பெயர் பால்ராஜ் மற்றும்
கதிர்வேல், ஆனால் குடும்பத்தில் அவர்கள் இருவரையும் குட்டி மற்றும் அப்பு
என்று செல்லமாக அழைப்பார்கள். உயில் எழுதும் போது இந்த செல்ல பெயர்க ைளயே
குறிப்பிட்டு எழுதுகிறார். அவர் இறந்த பின்பு உயிலை பார்க்கும்
உறவினர்கள் பெயர் மாறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இப்போது
அவர்கள் பெயரில் சொத்தை எப்படி மாற்றுவது என்று திகைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு உயில் எழுதும் போது ஒவ்வொருவருக்கும்
கொடுக்க நினைக்கும் சொத்தை ஒவ்வொரு சொத்து விவரமாக (Schedule)
குறிப்பிட்டு உயில் எழுதுவது நல்லது.
எ.கா. மூன்று பேருக்கு உயில் எழுதும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள
சொத்தை முறையே Schedule A, Schedule B , Schedule C என குறிப்பிட்டுவது
நல்லது. உயில் எழுதும் போது Schedule A சொத்து ஒருவருக்கு Schedule B,
Schedule C மற்றவர்களுக்கு என தனித்தனியாக குறிப்பிட்டு விடலாம்
மேற்கண்ட எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு உயில் எழுதவேண்டும். வக்கீல்
மூலமாகவோ அல்லது டாக்குமென்ட் ரைட்டர் மூலமாகவோ அல்லது நன்றாக விவரம்
தெரிந்தவர் மூலமாகவோ உயில் எழுத வேண்டும்.
உயிலை முத்திரைத்தாளில் எழுதவேண்டிய அவசியம் இல்லை. பச்சைத்தாளில்
எழுதினால் போதுமானது. உயிலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யவிரும்புபவர்கள் சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ்
வருகிறதோ அங்கு தான் பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணனமாக Rs.50.00
(ரூபாய்.ஐம்பது) ம், கணினி கட்டணமாக Rs.100.00(ரூபாய்.நூறு)ம் செலுத்த
வேண்டும். வேறு எந்த கட்டணமும் இல்லை. சொத்துக்களின் அளவு, கைடு லைன்
வேல்யூ போன்றவற்றைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சொத்துக்களின் மதிப்பு
எவ்வளவு இருந்தாலும் பதிவு செய்வதற்கு ஆகும் செலவு Rs.150.00
(ரூபாய்.நூற்று ஐம்பது) மட்டும் தான். மற்ற சொத்துக்களை பதிவு செய்யும்
போது பின்பற்றப்படும் முறை, அதாவது உயில் எழுதுபவரின் புகைப்படம்
ஒட்டப்பட்டு அவருடைய இடது கை பெருவிரல் கைரேகை வாங்கப்பட்டு இரண்டு
சாட்சிகளின் கையொப்பமும் வாங்கப்படும்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்று பதிவு செய்ய முடியாதவர்கள் மேற்கண்ட
விஷயங்களைத் தெளிவாக பச்சைத்தாளில் குறிப்பிட்டு கீழே கையொப்பம் இட்டு
இடது கைபெருவிரல் ரேகை இட வேண்டும். இரண்டு சாட்சிகளின் கையொப்பமும்
வேண்டும்.
உயில் எழுதிய பிறகு தமக்கு வேண்டிய இருவரிடம் கட்டாயம் அதை தெரிவிக்க
வேண்டும். அப்படியென்றால் தான் அவர் இறந்த பிறகு உயில் உரியவரிடம் போய்
சேரும். உயில் எழுதியும் யாரிடமும் தெரிவிக்காமல் இருக்கும் பட்சத்தில்
சில சமயம் பயனில்லாமல் போவதுமுண்டு. சிலசமயங்களில் ஏதேனும் ஒன்றை
உறவினர்கள் தேடும் போது சில ஆண்டுகள் கழித்து உயில் கிடைத்த
நிகழ்ச்சிகளும் உள்ளன. ஒருவர் இறந்தபின்புதான், அந்த உயிலின்படி அவர்
யார் யாருக்கெல்லாம் சொத்து வைத்திருக்கிறாரோ அவர்கள் சொத்துக்கு
உரிமையாளர்கள் ஆவார்கள்.
உயிலின்படி தங்கள் பெயருக்கு சொத்தை மாற்ற விரும்புபவர்கள் கீழ்கண்ட
முறைகளை பின்பற்ற வேண்டும்.
சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று தங்கள் பெயருக்கு பதிவு செய்ய
வேண்டிய அவசியம் இல்லை.
உயில் எழுதியவரின் இறப்பு சான்றிதழ், உயிலின் நகல் மற்றும் உயில்
யாருக்கு எழுதியிருக்கிறாரோ அவருடைய ID Proof முதலியவற்றை
வருவாய்த்துறையில் சமர்பித்து பட்டா, சிட்டா முதலியவற்றை தங்கள்
பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் அந்த சொத்தை விற்க
நினைக்கும் பட்சத்தில் இந்த ஆவணங்களே போதுமானது.