போலி பத்திரத்தின் மூலம் மோசடிகள் நடக்கின்றன என்ற செய்திகள் அடிக்கடி
வந்து கொண்டிருக்கின்றன.
2006-ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் பத்திரப்பதிவின் போது சொத்து வாங்குபவர்
மற்றும் விற்பவர் இருவருடைய கையெழுத்து மற்றும் கைரேகை மட்டும் போதும்
என்ற நிலை இருந்தது. அந்த சமயத்தில் போலி பத்திரங்கள் தயாரிப்பது எளிதாக
இருந்தது. அதை தடுப்பதற்கு 2006-ஆம் ஆண்டு முதல் தான் பத்திரப்பதிவின்
போது சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருடைய புகைப்படம் ஒட்டும்
முறையும் ID வைத்து உறுதி செய்யும் முறையும் அமுலுக்கு வந்தது.
இருந்தாலும் போலி பத்திர மோசடிகள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன.
போலி பத்திரத்தை தயார் செய்வது எப்படி?
போலி பத்திரம் தயார் செய்பவர்கள் அதிக நாள் எவராலும் பராமரிக்கப்படாத
இடம், யாரும் வந்து பார்வை இடாத இடம் போன்ற இடங்களைத் தான் முதலில்
தேடுகிறார்கள். அந்த நிலத்தின் உரிமையாளரின் பெயர், சர்வே நம்பர் போன்ற
விவரங்களை தெரிந்து கொண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தின் நகலை
பெற்று விடுகிறார்கள். அதன் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து கீழ்கண்ட
முறையில் போலி ஆவணங்கள் தயார் செய்கிறார்கள்.
1. அதே போன்று பத்திரத்தை தயார் செய்வது முதல் முத்திரைத்தாளின் பின்
பக்கம் பதிவு விவரங்கள், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் கைரேகை,
கையொப்பம் வரை இவர்களே போட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது
போன்றே ஒரு போலியான ஒரு புதிய கிரயப்பத்திரத்தை உருவாக்கலாம்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் இடப்படும் முத்திரை முதற்கொண்டு போலியானதாக
இருக்கும். இப்படி ஏமாற்றுபவர்கள் அவ்வப்போது முத்திரைதாள்களை வாங்கி
வைத்திருப்பார்கள்.
2. சொத்து யார் பெயரில் இருக்கிறதோ அதே பெயரைக் கொண்ட ஒருவர் தெரிந்த
இன்னொருவருக்கு விற்பது போல சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து
விடுவார்கள். இது சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யப்பட்டிருந்தாலும் விற்றவர் உண்மையான சொத்தின் உரிமையாளர் இல்லை
என்பதால் இதுவும் போலி பத்திரம் தான். இந்த பத்திரத்தின் படி சொத்தை
வாங்கியவர் போலியான புதிய உரிமையாளர் ஆகி விடுகிறார். இப்போது சொத்தை
அடுத்தவருக்கு விற்பது அவர்களுக்கு எளிமையாக இருக்கிறது.
3. சொத்தின் உரிமையாளர் தன்னை Power of attorney-ஆக நியமித்திருக்கிறார்
என்று ஒரு போலியான Power of attorney-யை தயார் செய்து அதை வைத்து சொத்தை
தெரிந்த இன்னொருவருக்கு விற்பது போல சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்து விடுவார்கள். சார்பதிவாளர் அலுவலகத்தில் Power of attorney
கொடுக்கப்பட்ட பத்திரத்தைப் பார்[பதில்லை என்பது இவர்களுக்குச்
சாதகமாகிவிடுகிறது.
EC apply செய்து பார்க்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும் விற்றவர்,
வாங்கியவர் பெயர்கள் மற்றும் கிரயப்பத்திர நம்பர், ஆண்டு முதலியவற்றை
வைத்து உண்மையை கண்டறிய முடியாது. ஏனெனில் போலி பத்திரம் செய்பவர்கள்
உண்மையான பத்திரத்தில் உள்ள விவரங்களை அப்படியே ஒரு பிழையில்லாது போலி
பத்திரத்தில் கொடுத்து விடுகிறார்கள்.
போலி பத்திரத்தை பார்த்து அது original என எண்ணி பலரும் ஏமாந்து விடுகிறார்கள்.
போலி பத்திரத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத போலி பத்திரங்களைக் கண்டு
பிடிப்பது எளிது. அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்
விவரங்களை வைத்து இந்த சொத்து எந்தச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்து பெற
வேண்டும். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது போலி பத்திரம் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்.
போலி பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் சரியாக இருந்தாலும்
முத்திரைத்தாள் வாங்கிய தேதி மற்றும் முதல் முத்திரைத்தாளின் பின்பக்கம்
குறிக்கப்பட்டிருக்கும் பதிவு விவரங்கள் ஆகியவற்றில் உள்ள வித்தியாசங்களை
வைத்து எளிதில் அடையாளம் கண்டு விடலாம். ஆனால் சொத்தின் உரிமையாளர்
அல்லாத ஒருவரால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு
தயாரிக்கப்பட்ட போலி பத்திரத்தை கண்டு பிடிப்பது கடினம். இது பதிவு
செய்யப்பட்டிருப்பதால் நாம் நகல் பெறும் போது அதே copy தான் கிடைக்கும்.
ஆனால்
அந்த சொத்தின் மூலப்பத்திரங்களை வைத்து ஓரளவு கண்டுபிடிக்க முடியும்.
பொதுவாக சொத்தின் உரிமையாளர்களிடம் சொத்து சம்பந்தமான மூலப்பத்திரங்களின்
original அனைத்தும் இருக்கும். அதை சொத்தை விற்பவர்கள்
வைத்திருக்கிறார்களா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சொத்தின் உரிமையாளர் அல்லாத ஒருவரால் சார்பதிவாளர் அலுவலகத்தில்
சொத்து பதிவு செய்வதை தடுப்பது எப்படி?
தற்போதைய முறைப்படி சொத்து பதிவின் போது சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு ID-யை வைத்து அவர்களை உறுதி
செய்தாலும், சொத்தின் உண்மையான உரிமையாளர்கள் இவர்கள் தான் என்பதை உறுதி
செய்த பின்னரே சொத்தை பதிவு செய்யலாம் என்னும் முறை அமுலுக்கு வந்தாலே
இது போன்ற போலி பத்திரங்கள் மூலம் சொத்தைப் பதிவு செய்வதைத் தடுக்கலாம்.
சொத்தை விற்கும் ஒருவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அவர்தான் சொத்தின்
உரிமையாளர் என்பதற்கான சான்றுகளை கொடுக்க வேண்டும். அவர் சொத்து வாங்கிய
கிரயப்பத்திரத்தின் original மற்றும் வருவாய்த் துறையினரால்
கொடுக்கப்படும் பட்டா போன்றவற்றை சரிபார்த்த பின்னரே சார்பதிவாளர் அந்த
சொத்தைப் பதிவு செய்ய வேண்டும். இப்போது வழங்கப்படும் computer
பட்டாக்ககளில் சொத்தின் உரிமையாளரின் புகைப்படம் கொடுக்கப் படுவதில்லை.
புகைப்படத்துடன் கூடிய பட்டாக்கள் வந்தால் இது போன்ற மோசடிகளைத்
தவிர்ப்பது இன்னும் எளிதாக இருக்கும்.