Thursday, December 15, 2011

Patta

பட்டா

சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தைப் பதிவு செய்து விட்டு அதோடு வேலை
முடிந்து விட்டது என பலரும் நினைக்கிறார்கள். வருவாய்த்துறையில்
பட்டாவைத் தங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் என்பது சிலருக்கு
தெரிவதில்லை, சிலர் அதனுடைய முக்கியத்துவம் தெரியாத காரணத்தினால் மெதுவாக
பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள். சிலர் அது ஒரு பெரிய process
என நினைத்து வாங்காமல் விட்டு விடுகிறார்கள். நிலத்தின் உரிமை யார்
பெயரில் இருக்கிறது என்பதற்கான சான்று தான் பட்டா என்பது.

நிலம் வாங்குபவர் பதிவுத்துறையில் நிலத்தைப் பதிவு செய்துவிட்டு,
வருவாய்த்துறையில் பாட்டாவைத் தன் பெயருக்கு மாற்றாமல் இருக்கும்
பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பதிவுத்துறையில் நீங்கள்
உரிமையாளராகவும், வருவாய்த்துறை பதிவேடுகளில் உங்களுக்கு நிலம் விற்றவர்
உரிமையாளராகவும் இருப்பார்.

திருச்சி அருகில் ஒருவர் 1996-ஆம் ஆண்டு 5 ஏக்கர் நிலத்தை வாங்கி
விவசாயம் செய்து வருகிறார். அவர் கிரயப்பத்திரம் பதிவு செய்து விட்டார்.
ஆனால் வருவாய்த்துறையில் சென்று பட்டாவை மாற்றவில்லை. இப்பொழுது அந்த
இடத்தை விற்க முயல்கிறார். நிலத்தை வாங்குபவர் பட்டா கேட்கிறார்,
வட்டாட்சியர் அலுவலகம் (Taluk office) சென்று பட்டாவிற்கு விண்ணப்பம்
செய்கிறார். ஒரு மாத காலம் கழித்து வட்டாசியர் அலுவலகத்திலிருந்து ஒரு
கடிதம் வருகிறது, அதில் வருவாய்த்துறையின் பதிவேட்டில் தங்கள் பட்டா
விண்ணப்பத்தில் கூறும் சர்வே எண் தங்களுக்கு நிலத்தை விற்றவர் பெயரில்
இல்லாத காரணத்தினால் தங்களுக்குப் பட்டா வழங்க இயலாது என்று அந்தக்
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதிர்ந்து போன அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று விசாரிக்கும்
பொழுது, தமக்கு நிலம் விற்றவரின் மகன் பெயரில் பட்டா இருக்கிறது. அவரிடம்
சென்று கேட்கும் பொழுது இது என்னுடைய அப்பாவின் சொத்து என்பதால் அவர்
இறந்த பின் தன் பெயருக்குப் பட்டாவை மாற்றிக் கொண்டதாக கூறுகிறார். நிலம்
வாங்கியவர் கிரயப்பத்திரத்தை அவரிடம் காட்டுகிறார். அதைப் பார்த்த பின்
இன்னொரு செய்தியை நிலம் விற்றவரின் மகன் கூறியதும் அதிர்ச்சி
அதிகமாகிறது. காரணம் அந்தப் பட்டாவை வைத்து கூட்டுறவு வங்கியில்
விவசாயத்திற்காக கடன் வாங்கியிருப்பதாக சொல்கிறார். வேறு வழியில்லாமல்
அந்தக் கடனை நிலம் வாங்கியவரே அடைத்து சொத்து விற்றவரின் மகனிடம், "தந்தை
இவருக்கு ஏற்கெனவே சொத்தை விற்ற காரணத்தினால் தன் பெயரில் உள்ள பட்டாவை
ரத்து செய்வதற்கும் வாங்கியவரின் பெயருக்குப் பட்டாவை பெயர் மாற்றம்
செய்வதற்கும் எந்தவித ஆட்சேபனையும் இல்லை" என ஒரு கடிதம் வாங்கி அதை
வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்து பிறகு தன் பெயருக்கு மாற்றம்
செய்கிறார்.

வீண் செலவும், மன உளைச்சலும் தேவையில்லாத ஒன்று தான். சொத்து
வாங்கியவரின் மகன் சம்மதம் தெரிவித்ததினால் அவர் வாங்கிய கடனை மட்டும்
அடைக்க வேண்டி இருந்தது. ஒரு வேளை அவர் முரண்பாடு தெரிவித்திருந்தால்
அவர் நீதிமன்றத்தை நாடி பல ஆண்டுகள் கழித்து தான் அந்த நிலத்தை
பெற்றிருக்க முடியும்.

பட்டா

அரசாங்கத்தால் இலவசமாக நிலம் வழங்கப்படும் போது இலவச வீட்டுமனை பட்டா
வழங்கப்படுகிறது என்று தான் அறிவிப்பார்கள், மாறாக இலவச கிரயப்பத்திரம்
வழங்கப்படும் என்று அறிவிப்பதில்லை. இதிலிருந்து நாம் பட்டாவின்
முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். பட்டாவின் முக்கியத்துவத்தைத்
தெரிந்து கொள்ள உயிலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உயில் மூலம்
உரிமை கிடைக்கும் சொத்திற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய
வேண்டிய அவசியமில்லை. வருவாய்த்துறைக்கு விண்ணப்பம் செய்து பட்டாவை
மாற்றிக் கொள்ளலாம். பட்டாவில் பெயர் மாற்றம் செய்தவுடன்
வருவாய்த்துறையின் சிட்டா, அடங்கல் மற்றும் 'A ' ரெஜிஸ்டர் போன்ற
பதிவேடுகளிலும் நம் பெயர் மாற்றப்படும்.

1. பட்டாவை நமது பெயருக்கு மாற்றாத பட்சத்தில் பல மோசடிகளுக்கு வழி வகுக்கிறது.

சம்பவம் : 1

அரக்கோணம் அருகே 11/2 ஏக்கர் நிலத்தை 2004-ஆம் ஆண்டு ஒருவர் விற்பனை
செய்கிறார். 2007-ஆம் ஆண்டு வரை நிலத்தைத் தன்னிடம் வாங்கியவர் அவர்
பெயருக்குப் பட்டாவை மாற்றவில்லை. 2004-ஆம் ஆண்டிலிருந்து வரியும்
கட்டப்படவில்லை. இந்த விவரத்தைத் தெரிந்து கொள்கிறார். பட்டா இன்னும் தன்
பெயரிலேயே இருப்பதால் தன் பெயரில் வரியைக் கட்டுகிறார். இதைச் செல்வாக்கு
உள்ள ஒருவரிடம் சொல்லியே இரண்டாம் முறை அவருக்கு விற்பனை செய்கிறார்.
இரண்டாவது முறை வாங்கியவரோ உடனே தன் பெயருக்கு பட்டாவை மாற்றி
விடுகிறார். 2009-ஆம் ஆண்டு தனக்கு பட்டா தேவைப்படும் தருணத்தில் முதலில்
வாங்கியவர் வருவாய்த்துறையை அணுகுகிறார். வேறு ஒருவர் பெயரில் பட்டா
இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச்சான்றிதழ் விண்ணப்பம் செய்து
பார்த்த போது 2006ஆம் ஆண்டு தனக்கு நிலத்தை விற்றவரே இன்னொருவருக்கு
விற்றதாக entry இருக்கிறது. இரண்டாவது வாங்கியவர் செல்வாக்கு உள்ளவராக
இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் 1 வருட காலமாக தவித்துக்
கொண்டிருக்கிறார். நிலத்தை வாங்கிய உடனேயே தன் பெயருக்கு பட்டாடவை மாற்றி
இருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்காது.

2. போலி பத்திர மோசடிக்கும் இது உதவுகிறது.

சம்பவம் : 2

திருச்சி அருகில் 4 ஏக்கர் நிலத்தை ஒருவர் 2006-ஆம் ஆண்டு
விற்றுவிட்டார். நிலத்தை வாங்கியவர் தன்னுடைய பெயருக்கு 3 வருடங்களாக
பட்டாவை மாற்றவில்லை. இதை தெரிந்து கொண்ட ஒருவர் நிலம் வாங்கியவர் பெயர்
கொண்ட இன்னொருவரை தயார் செய்து கொண்டு தன்னுடைய பெயருக்கு நிலத்தை கிரயம்
செய்து விடுகிறார். பட்டாவையும் தன் பெயருக்கு மாற்றம் செய்து
கொள்கிறார். இப்போது வருவாய்த்துறையின் பதிவேடுகளின்படி இவர் அந்த
நிலத்தின்உரிமையாளராகி விட்டார். இப்போது முதலில் வாங்கியவர்
நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து அலைந்து கொண்டிருக்கிறார்.

பட்டாவில் கீழ்கண்ட விவரங்கள் இருக்கும்.

1. மாவட்டத்தின் பெயர், 2. வட்டத்தின் பெயர், 3. கிராமத்தின் பெயர், 4.
பட்டா எண்,5. உரிமையாளர் பெயர் அல்லது உரிமையாளர்கள் பெயர்கள், 6. சர்வே
எண்ணும் மற்றும் அதன் உட்பிரிவும், 7. இடத்தின் பரப்பளவு ஹெக்டேர் -
ஏரில் குறிக்கப்பட்டிருக்கும் 8. தீர்வையினுடைய மதிப்பும்
குறிப்பிடப்பட்டிருக்கும் 9. வட்டாட்சியர் கையொப்பம் 10. நம் நிலம்
நன்செய், புன்செய், மற்றவை இவற்றில் எந்த வகையில் அடங்கியிருக்கிறதோ
அதில் குறிக்கப்பட்டிருக்கும். நாம் இடம் வாங்கும் போது
கிரயப்பத்திரத்தில் இடத்தின் அளவு ஹெக்டேர், ஏர், ஏக்கர், சென்ட்,
சதுரமீட்டர் அல்லது சதுர அடி இவைகளில் ஏதேனும் ஒன்றில் தான்
குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் பட்டாவில் ஹெக்டேர், ஏரில் தான்
குறிக்கப்பட்டிருக்கும்.

கீழ்கண்ட விபரங்கள் அளவு மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

1 ஹெக்டேர் - 100 ஏர்
1 ஹெக்டேர் - 2.47 ஏக்கர்
1 ஏர் - 1076 சதுர அடி
1 ஏர் - 2.47 சென்ட்
1 ஏக்கர் - 100 சென்ட்
1 ஏக்கர் - 40.5 ஏர்
1 மீட்டர் - 3.28 அடி

தற்போது வழங்கப்படும் கம்ப்யூட்டர் பட்டாவில் பட்டா அச்சிடப்பட்ட
தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நாம் நிலம் வாங்கியவுடன் நம் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யவதில்
இரண்டு வகை உண்டு. 1. பட்டா பெயர் மாற்றம், 2. உட்பிரிவு பட்டா

1. பட்டா பெயர் மாற்றம்:-

நாம் ஒருவரிடம் நிலம் வாங்கும் போது இடத்தின் சர்வே எண்ணில்
முழுப்பகுதியையும் வாங்கி விட்டால் பட்டாவை பெயர் மாற்றம் செய்தால்
போதும். எடுத்துக்காட்டாக சர்வே எண்250/1-ல் உள்ள மொத்த அளவு 1.6 ஏக்கர்
என வைத்துக் கொள்வோம். இந்த முழு அளவையும் அதாவது 1.6 ஏக்கர் நாம் வாங்கி
விட்டால் விற்றவரின் பெயரில் உள்ள பட்டாவை நம் பெயருக்கு அப்படியே
மாற்றிக் கொள்ளலாம். இதற்கு "பட்டா பெயர் மாற்றம்" என்று பெயர். இதில்
நாம் உரிமையாளரின் பெயரை மட்டும் தான் மாற்றுகிறோம் மற்றபடி சர்வே எண்,
உட்பிரிவு, பரப்பு, தீர்வை மற்றும் வரைபடம் (FMB) இதில் எந்த மாற்றமும்
இருக்காது.

2. உட்பிரிவு பட்டா:-

சர்வே எண். 250/1-ல் உள்ள 1.6 ஏக்கரில் ஒரு பகுதியை மட்டும் அதாவது 0.6
ஏக்கர் (60 சென்ட்) மட்டும் நாம் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இப்போது
மொத்தம் உள்ள 1.6 ஏக்கரில் 1 ஏக்கர் நமக்கு சொத்தை விற்றவரும் 0.6
ஏக்கருக்கு நாமும் உரிமையாளர் ஆகி விடுவோம். இப்போது சர்வே எண்
250/1-க்கு இருவர் உரிமையாளர்கள் ஆகி விடுகிறார்கள். இப்பொழுது நாம்
பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் போது சர்வே எண். 250/1 இரண்டாக
பிரிக்கப்பட்டு அதாவது உட்பிரிவு செய்யப்பட்டு 2 பட்டாக்களாக
பிரிக்கப்படும். அப்போது 250/1 சர்வே எண் ஆனது 250/1A - 1 ஏக்கர் என்றும்
250/1B - 0.6 ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு இரண்டு உரிமயாளர்களுக்கும்
தனித்தனி பட்டா இலக்கம் குறிக்கப்பட்டு இரண்டு பேருக்கும் தனித்தனி
பட்டாக்கள் வழங்கப்படும். இப்படி ஒரு சர்வே எண்ணை ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட பகுதிகளாக உட்பிரிவு செய்து கொடுக்கப்படும் பட்டா முறைக்கு
உட்பிரிவு பட்டா என்று பெயர். இதில் சர்வே எண் மாறாது. மாறாக உட்பிரிவு
எண், பரப்பு, தீர்வை மதிப்பு ஆகிய அனைத்தும் மாறுபட்டிருக்கும். இந்த
சர்வே எண்ணுக்குரிய வரை படத்திலும்(FMB) மாற்றம் செய்யப்பட்டு இந்த புதிய
உட்பிரிவுடன் கூடிய சர்வே எண் அதில் குறிக்கப்பட்டிருக்கும்.