காரை எடுத்தவுடன் அது எவ்வளவு 'பர்பெக்ட்'டாக செல்ல வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்த அளவுக்கு அதன் பராமரிப்பு மீதும் நமக்கு கவனமும், பொறுப்பும் இருக்க வேண்டியது அவசியம்.
கார் பராமரிப்பு என்றவுடன் அதை பூதாகரமாக நினைத்து அலுத்து கொண்டு, அதன் முக்கியத்துவத்தை பலர் அறிவதில்லை. இதனால், காரை வைத்துள்ள பலர் கசப்பான அனுபவங்களை பெற நேரிடுகிறது.
தயாரிப்பாளரின் பரிந்துரை மற்றும் சர்வீஸ் மேனுவலில் கொடுத்துள்ள வழிமுறைகளின்படி, குறிப்பிட்ட கால அளவில் சர்வீஸ் மற்றும் பராமரிப்பை மேற்கொண்டால் போதும், நாம் நடுவழியில் தவிக்கவேண்டிய நிலை ஏற்படாது. மேலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காரின் மதிப்பும் குறையாது.
குறிப்பிட்ட கால அளவில் காரை பராமரிப்பு குறித்த வழிமுறைகள்:
மாதத்திற்கு ஒரு முறையாவது...
டயர்களில் காற்றின் அழுத்தத்தையும், கூலண்ட் அளவையும் கண்டிப்பாக மாதத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். எஞ்சின் ஆயில் சரியான அளவில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இதை எவ்வாறு செய்வது என்பது குறித்த வழிமுறைகள் கார் மேனுவலில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
மெக்கானிக்கை நம்பி இருக்காமல் இதுபோன்ற சில எளிய சோதனைகளை ஓய்வு நேரங்களில் நீங்களே செய்யுங்கள். இன்டிகேட்டர் மற்றும் முகப்பு விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்த்துவிடுங்கள். குறிப்பாக, பின்புற இன்டிகேட்டர் விளக்குகளை எரிய செய்து பார்த்துக்கொள்வது மிக அவசியம். கண்ணாடியில் தண்ணீர் விட்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள வைப்பரை இயக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது...
காரின் ஓட்டத்திற்கு தக்கவாறு மூன்று மாதத்திலிருந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை எஞ்சின் ஆயிலை மாற்ற வேண்டும். இதனால், எஞ்சின் சூடாவது தவிர்க்கப்படுதால், அதன் ஆயுட்காலம் வெகுவாக அதிகரிக்கும். மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் பெற முடியும். இதேபோன்று, பேட்டரியையும் சோதனை செய்ய வேண்டும். பேட்டரியில் இணைக்கப்பட்டுள்ள ஒயர்கள் சரியாக பொருந்தியுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது...
ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 24,000 கி.மீ.க்கு ஒரு முறை ஏர்பில்டரை மாற்ற வேண்டியது அவசியம். எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள சர்பென்டைன் பெல்ட்டையும் அவசியம் சோதனை செய்ய வேண்டும். சர்பென்டைன் பெல்ட் சரியாக பொருந்தியுள்ளதா, பெல்ட்டில் தேய்மானம் உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏசி கம்பரசர், ஆல்டர்னேட்டர், பவர் ஸ்டீயரிங் பம்ப் மற்றும் வாட்டர் பம்ப் ஆகியவை சர்பென்டைன் பெல்ட்டில் இயங்குகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை காரை சர்வீஸ் செய்யும்போது தேய்மானமடைந்த டயர்களை மாற்றுவதும், பிரேக்குகளை சரிசெய்வதும் அவசியம்.
தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பராமரிப்பும் வேறுபடும். எனவே, உங்கள் காரின் பராமரிப்பு குறித்து மெக்கானிக் அல்லது சர்வீஸ் சென்டரில் கேட்டு தெரிந்துகொண்டு செய்தால் நல்லது. இதனால், உங்களது பொன்னான நேரமும், பணமும் மிச்சமாகும். காரை முறையான பராமரிப்பில் வைத்திருந்தால், எரிபொருள் சிக்கனம் பெறுவது மட்டுமின்றி மதிப்பும் குறையாது. மேலும், தேவையின்றி நடுவழியில் நின்று தவிக்க வேண்டிய நிலையும் ஏற்படாது.
From :- http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/car-maintenance-tips-aid0091.html