Wednesday, November 2, 2011

boudhik

மார்கழி மாத தேச பக்தி கதைகள் - பாலர்
--------------------------------------------------------------


மதுரகவி ஆழ்வார்
-----------------------
ஆன்மீகம் தழைத்து வந்த பாண்டிய நாட்டில் திருக்கோவூர் என்ற தலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டில் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் கூடிய நாளில் அவதரித்தார்.

நம்மாழ்வார் பிறப்பதற்கு முன் அவதரித்திருந்தாலும், நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் எனலாம். சிறு வயதிலிருந்தே ஸ்ரீமந் நாராயணனிடம் பக்திகொண்டு பரமனைப் போற்றிப் பாடிவந்தார். வடமொழிப் புலமையும் கொண்டிருந்தார்.

ஒருநாள் பூஜைகள் நடத்திய பின்பு காட்டுத் தீயோ என்று எண்ணும் படியான பெரிய ஒளியைக் கண்டார். அந்த ஒளி நட்சத்திரமாக இவரைத் தெற்கு நோக்கி அழைத்து வந்தது. திருநகரி என்ற ஊரில் சென்று மறைந்தது. அங்கு கோயிலில் மரத்தடியில் 16 வருடங்களாகக் கண் மூடிய நிலையில் தவமிருந்த நம்மாழ்வாரைப் பற்றிக் கேள்விப் பட்டார். தம் அறிவுக் கூர்மையால் பேசாதிருந்த நம்மாழ்வாரைக் கண்திறக்கவும், பேசவும் வைத்தார்.

நம்மாழ்வாருடைய தத்துவ விளக்கங்களைக் கேட்டறிந்து தலை மேல் கரம் குவித்து "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பாசுர பாமாலை பாடி நம்மாழ்வாரையே தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார். அவரிடமிருந்து வேதங்களைக் கற்று பரமனின் திருவடிகளே சரணம் என்று பாசுரங்கள் பாடி மகிழ்ந்தார்.

ஆலயத்தினுள்ளே நம்மாழ்வாரின் சிலை ஒன்றையும் நிறுவி ஸ்ரீமந் நாராயணனுக்கும், தம் ஆன்மீக குருவிற்கும் தினசரி பூஜைகள் செய்தும் பாசுரங்கள் பாடியும் பரமனை சேர்ந்தார்.

திருப்பாணாழ்வார்
----------------------
சோழவள நாட்டின் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கிய உரையூரில் கி.பி.8ம் நூற்றாண்டில் காத்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் பாணர் என்ற இசை வழிபாடு செய்யும் குலத்தில் அவதரித்தார்.

ஸ்ரீமந் நாராயணனின் மார்பில் இருக்கும் ஸ்ரீவத்ஸம் என்கிற மருவின் அம்சமாக விளங்குகிறார். தீண்டத் தகாத குலத்தில் பிறந்தவர் என்று கருதப் பட்டதால் காவிரியைக் கடந்து அரங்கத்தம்மானைக் கண் குளிரக் காண முடியவில்லையே என்று வருந்தி, காவிரியின் அக்கரையில் நின்ற படியே திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தவமிருந்தார்.

தினசரி திருமஞ்சனம் செய்யும் உலோக சாரங்க முனிவரின் கனவில் தோன்றிய எம்பெருமான், அக்கரையில் தவமிருக்கும் திருப்பாணாழ்வாரை பட்டரின் தோளில் சுமந்து வரச்செய்து அவருக்குக் காட்சியளித்தார். தான் கண்ட காட்சியில் உள்ளம் நெகிழ்ந்து அரங்கனின் திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணிக்கும் 10 பாசுரங்களைப் பாடினார்.

ஆண்டாளைப் போலவே அரங்கனிடம் அன்பு வைத்து அவனையே நினைந்து எம்பெருமானுடன் கலந்தார் என்பது புராண வரலாறு. தம் பாசுரங்களில் மனிதர்கள் எப்படி பக்தி மார்க்கத்தில் வாழ வேண்டும் என்ற முறைகளையும், பெருமானிடம் சரணாகதி அடைவதன் அவசியத்தையும் அழகாகப் பாடியுள்ளார்



தை மாத தேச பக்தி கதைகள் (பாலர்)
-------------------------------------------------------

பூலித்தேவர்
---------------

1755ஆம் ஆண்டு கர்னல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்யைனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.

1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1767 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.


வேலுநாச்சியார்
--------------------
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.
ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.
பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்

ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.

ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.

கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.

அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.

விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.

அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.

1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.

வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.